அடிப்படை உரிமைகள், அடிப்படைக் கடமைகள் (ம) அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகள்


 

அடிப்படை உரிமைகள் (பகுதி III)

இந்திய அரசியலமைப்புச் சட்டம் பகுதி (III) 12ல் இருந்து 35  வரையுள்ள சட்டப்பிரிவுகள் அடிப்படை  உரிமைகள் பற்றி கூறுகின்றன.

இந்த அடிப்படைஉரிமைகளை அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகளின் தாக்கத்தால் உருவாக்கினார்கள்.  முதலில் இந்திய அரசியலமைப்பு ஏழு அடிப்படை உரிமைகளை  வழங்கியது. ஆனால்,  தற்போது ஆறு அடிப்படை  உரிமைகள் மட்டுமே உள்ளன.

அரசியலமைப்பின் பகுதி (III) ’இந்தியாவின் மகாசாசனம்’ என அழைக்கப்படுகிறது. இந்தியாவில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் அடிப்படை உரிமைகள் பொதுவானது. ஆனால் இந்திய குடிமக்களுக்கு மட்டுமேயான சில அடிப்படைஉரிமைகளும் உள்ளன.

அடிப்படை உரிமைகள்

சமத்துவ உரிமை (பிரிவு 14 – 18)

சுதந்திர உரிமை (பிரிவு 19- 22)

சுரண்டலுக்கு எதிரான உரிமை (பிரிவு 23-24)

சமய மற்று் மனச்சான்று சுதந்திரத்திற்கான உரிமை (பிரிவு 25- 28)

சிறுபான்மையினருக்கான பண்பாடு மற்றும் கல்வி உரிமை (பிரிவு 29-30)

அரசியலமைப்பு வழி தீர்வுகளுக்கான உரிமை (பிரிவு 32)

 

1. சமத்துவ உரிமை (பிரிவு 14 – 18)

சட்டத்தின் முன் அனைவரும் சமம், சட்டத்தின் மூலம் அனைவருக்கும் சம பாதுகாப்பு என்பதே இவ்வுரிமை ஆகும்.

சமயம், இனம், பாலினம் அல்லது பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் வேறுப்படுத்தலோ, ஒதுக்குதலோ சட்டத்திற்கு புறம்பானதாகும். அவ்வாறு நடத்தப்பட்டால் ஒருவர் நீதிமன்றத்தை அணுகலாம்.

பிரிவு 14 - சட்டத்தின் முன் அனைவரும் சமம்.

பிரிவு 15- மதம், இனம், சாதி, பாலினம் மற்றும் பிறப்பிடம் இவற்றின் அடிப்படையில் பாகுபடுத்துவதைத் தடைசெய்தல்.

பிரிவு 16 - பொது வேலைவாய்ப்புகளில் சமவாய்ப்பளித்தல்.

பிரிவு 17 – தீண்டாமையை ஒழித்தல்.

பிரிவு 18 - இராணுவ மற்றும் கல்விசார் பட்டங்களைத் தவிர மற்ற பட்டங்களை நீக்குதல்.

 

2. சுதந்திர உரிமை (பிரிவு 19- 22)

ஆறு வகையான சுதந்திரங்கள் நமது அரசியலமைப்புச் சட்டத்தில் கொடுக்கப்ப்ட்டுள்ளன. அவை

பிரிவு 19

• பேச்சுரிமை

 கருத்து தெரிவிக்கும் உரிமை

• ஆயுதமின்றி கூடும் உரிமை

• சங்கங்கள் அமைக்கும் உரிமை

• இந்தியாவில் எந்த பகுதியிலும் வசிக்கும்  உரிமை

• இந்தியா முழுவதும் சுதந்திரமாக நடமாடும் உரிமை

• எந்த தொழிலையும், வணிகத்தை செய்யும் உரிமை

பிரிவு 20 – குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கான உரிமை உரிமை மற்றும் தண்டனைகளிலிருந்து பாதுகாப்பு பெறும் உரிமை.

பிரிவு 21 - வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்குப் பாதுகாப்பு பெறும் உரிமை.

பிரிவு 21 A – தொடக்கக்கல்வி பெறும் உரிமை

2002ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட, 86-வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தின்படி,  இந்திய அரசியலமைப்பின் பிரிவு 45 திருத்தப்பட்டு, பிரிவு 21A வின் கீழ்  தொடக்கக்கல்வி, அடிப்படை உரிமையாகச்  சேர்க்கப்பட்டுள்ளது.  இந்தத் திருத்தம், மாநில அரசுகள்  முன்பருவ மழலையர் கல்வியை (Early Childhood Care and Education - ECCE) 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு வழங்க  அறிவுறுத்துகிறது

பிரிவு 22 - சில வழக்குகளில் கைது செய்து, தடுப்புக்  காவலில் வைப்பதற்கெதிரான பாதுகாப்பு உரிமை.

 

3. சுரண்டலுக்கு எதிரான உரிமை (பிரிவு 23-24)

14 வயதிற்குட்பட்ட சிறுவர்களை சுரங்கங்கள்,  அல்லது மற்ற அபாயகரமான தொழில்களில்  ஈடுபடுத்துவது சட்டப்படி குற்றமாகும்.  எந்த ஒரு  ஒப்பந்ததாரரோ, முதலாளியோ ஒரு தொழிலாளியை அவரது விருப்பத்திற்கு எதிராக ஒரு வேலையில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்த முடியாது.

பிரிவு 23 - கட்டாய வேலை, கொத்தடிமை முறை மற்றும் மனிதத் தன்மையற்ற வியாபாரத்தைத் தடுத்தல்.

பிரிவு 24 – தொழிற்சாலைகள் மற்றும் ஆபத்தான  இடங்களில் குழந்தைத் தொழிலாளர் முறையைத் தடுத்தல்.

 

4 சமயச் சுதந்திரம் மற்றும்  பகுத்தறிவுக்கான உரிமை (பிரிவு 25- 28)

குடிமக்கள் தாங்கள் விரும்பிய சமயத்தினை  ஏற்கவும் பின்பற்றவும் உரிமை அளிக்கிறது.

குடிமக்கள் சில சமய நம்பிக்கைகளை ஏற்று பின்பற்றுவதற்கு அல்லது சமய நம்பிக்கைகளின்றி தங்கள் மனசாட்சிபடி வாழ்வதற்கு உரிமை  அளிக்கப்பட்டுள்ளது.

பிரிவு 25 - எந்த ஒரு சமயத்தினை ஏற்கவும், பின்பற்றவும், பரப்பவும் உரிமை

பிரிவு 26 - சமய விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமை

பிரிவு 27 - எந்தவொரு மதத்தையும்  பரப்புவதற்காக வரி செலுத்துவதற்கெதிரான சுதந்திரம்.

பிரிவு 28 - மதம் சார்ந்த கல்வி நிறுவனங்களில்  நடைபெறும் வழிபாடு மற்றும்  அறிவுரை நிகழ்வுகளில் கலந்துகொள்ளாமலிருக்க உரிமை.

 

5 பண்பாடு மற்றும் கல்வி உரிமைகள் (பிரிவு 29- 30)

அரசியலமைப்பு சட்டம் பண்பாட்டினைப்  பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும், உரிமையை வழங்கியுள்ளது. கல்விக்கூடங்களை அமைக்கவும், நமது பாரம்பரியம் மற்றும் பண்பாட்டைப்  பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும் நமக்கு உரிமை உள்ளது.

சமயச்சார்பு கல்வி அளிக்க மக்கள் மத நிறுவனங்களை நிறுவலாம். அரசு அதற்கு மானியங்களை வழங்குகின்றது. இருப்பினும், சாதி,  நிற, இனம் அல்லது சமய வேறுபாட்டினைக்  காரணம் கூறி யாருக்கும் இவ்வகை நிறுவனங்களில் அனுமதி மறுத்தல் கூடாது.

பிரிவு 29 - சிறுபான்மையினரின் எழுத்து, மொழி மற்றும் கலாச்சாரப் பாதுகாப்பு

பிரிவு 30 – சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்களை நிறுவி, நிர்வகிக்கும் உரிமை.

1978ஆம் ஆண்டு, 44ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தப்படி, அடிப்படை உரிமைகள்  பட்டியலிலிருந்து சொத்துரிமை (பிரிவு 31) நீக்கப்பட்டது.   

இது இந்திய அரசியலமைப்புச் சட்டம் பகுதி XII, பிரிவு 300 A வின் கீழ் ஒரு சட்ட உரிமையாக வைக்கப்பட்டுள்ளது.

 

6 அரசியலமைப்பு வழி தீர்வுகளுக்கான உரிமை

 பிரிவு 32 - தனிப்பட்டவரின், அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும் போது,  நீதிமன்றத்தை அணுகி உரிமையைப் பெறுதல்.

நீதிப் பேராணை (writ) என்பது ஒரு செயலை செய்யவோ அல்லது அச்செயலை தடுக்கவோ, நீதிமன்றத்தால் அல்லது வேறு சட்ட அமைப்பினால் வழங்கப்படும் எழுத்துப்பூர்வமான உத்தரவு.

அடிப்படை உரிமைகள் அரசியலமைப்புச் சட்டத்தினால் உத்திரவாதம் தரப்பட்டவை, ஒரு குடிமகனின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகையில், அரசியலமைப்பு வழி தீர்வுகளுக்கான உரிமையின்படி அவர் நீதிமன்றத்தை அணுகலாம்.  நீதிமன்றம் அக்குடிமகனுக்குரிய உரிமையை மீட்டளிக்குமாறு அரசுக்கு ஆணையிடுகிறது.  இது நீதிப்பேராணை  என்று அழைக்கப்படுகிறது.

ஒரு செயல் அரசியலமைப்பு சட்டத்தின் படி ஏதேனும் தவறானதாக கருதப்படின் அதற்கான சரியான தீர்வுகளை அரசியலமைப்புச் சட்ட தீர்வாணைகள் வழங்குகின்றன.  இவ்வாறு இவ்வுரிமை அனைத்து உரிமைகளுக்கும் பாதுகாப்பாகவும், காவலாகவும் அமைகின்றது.

 

அடிப்படை உரிமைகளை நிறுத்தி வைத்தல்

இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 352ன் கீழ் குடியரசுத்தலைவரால் அவசர நிலை  அறிவிக்கப்படும் பொழுது, இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 19ன் கீழ் உத்திரவாதம் அளிக்கப்பட்ட சுதந்திரம் தாமாகவே நிறுத்தப்படுகிறது.  மற்ற அடிப்படை உரிமைகளையும் குடியரசுத்தலைவர் சில குறிப்பிட்ட ஆணைகளைப் பிறப்பிப்பதின் மூலம் தடை செய்யலாம்.

குடியரசுத்தலைவரின் இந்த ஆணைகள் நாடாளுமன்றத்தால்  கட்டாயம்  அங்கீகரிக்கப்பட வேண்டும்.

 

அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகள் (பகுதி – IV)

 


அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகள்,  இந்திய அரசியலமைப்புச் சட்டம் பகுதி IV  சட்டப்பிரிவு 36ல் இருநது 51 வரை தரப்பட்டுள்ளது.

அரசியலமைப்புச் சட்டம், வழிகாட்டும் நெறிமுறைகளுக்காகத் தனியாக எந்தவொரு வகைபாட்டினையும் கொண்டிருக்கவில்லை‘

இருப்பினும் பொருளடக்கம் மற்றும் வழிகாட்டுதல் அடிப்படையில் அவை மூன்று பெரும் பிரிவுகளாகப்  பிரிக்கப்பட்டுள்ளன. 

அதாவது சமதர்ம, காந்திய மற்றும் தாராள-அறிவுசார்ந்தவை  என்று  பிரிக்கப்பட்டுள்ளன. இந்த கொள்கைகளை, நீதிமன்றத்தால் வலுக்கட்டாயமாகக் செயல்படுத்த  முடியாது. ஆனால் இவை ஒரு நாட்டினை நிர்வகிக்க அவசியமானவை.  

இதில், ஆணுக்கும் பெண்ணுக்கும் சம ஊதியம், இலவச கட்டாய அடிப்படைக் கல்வி, வேலை பார்க்கும் உரிமை ஆகியவற்றுக்கான  குறிப்பிடத்தக்க விதிகளை இது கொண்டுள்ளது.

இந்திய அரசமைப்பின் பாகம் IV-ன் கீழ் முதுமை, வேலையின்மை, நோய்வாய்படுதல், வாழ்வாதாரத்திற்குத் தேவையான திட்டங்கள், பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களுக்கு சிறப்பு முன்னுரிமை, வளங்கள் பகிர்வில் உள்ள பாகுபாடுகள் போன்றவற்றிற்கு அரசு உதவிகள் வழங்குவதற்கான பிரிவுகள் கூறப்பட்டுள்ளன.

சமுதாய நலனை மக்களுக்குத் தருவதே இதன் நோக்கமாகும்.  இந்திய அரசியலமைப்பின் ‘புதுமையான சிறப்பம்சம்’ என டாக்டர். B.R. அம்பேத்கர் இதனை விவரிக்கிறார்.

 

அடிப்படைக் கடமைகள் (பகுதி IV A -  பிரிவு 51 A)

 


இந்திய அரசியலமைப்பில் அடிப்படைக்  கடமைகள் என்பவை முன்னாள் சோவியத் யூனியன் (USSR) [ரஷ்யா] அரசியலமைப்பின்  தாக்கத்தால் சேர்க்கப்பட்டதாகும்.

1976-ஆம் ஆண்டு, அமைக்கப்பட்ட சர்தார் ஸ்வரன் சிங் கமிட்டி அரசியலமைப்புச் சட்ட திருத்தம் செய்ய பரிந்துரைத்தது.

அதன்படி 1976ஆம் ஆண்டு  மேற்கொள்ளப்பட்ட 42வது அரசியல் அமைப்புச்  சட்டதிருத்தம் நமது அரசியலமைப்பில் குடிமக்களின் பொறுப்புகள் சிலவற்றைச் சேர்த்தது.  இவ்வாறு சேர்க்கப்பட்ட  பொறுப்புகளே குடிமக்களின் கடமைகள் என்றழைக்கப்பட்டன.

மேலும், இந்த சட்டத்திருத்தம், அரசியலமைப்பின் பகுதி IV A  என்ற ஒரு புதிய பகுதியைச் சேர்த்தது. இந்தப் புதிய பகுதி  51 A என்ற ஒரேயொரு பிரிவை மட்டும் கொண்டது.  இது குடிமக்களின் 11 அடிப்படைக் கடமைகளை விளக்கும் குறிப்பிட்ட சட்டத் தொகுப்பாக உள்ளது.

 

அரசியலமைப்பு கீழ்கண்ட 11 அடிப்படைக் கடமைகளைக் குறிப்பிடுகின்றது.

1. ஒவ்வொரு இந்திய குடிமகனும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினை மதிப்பதுடன், அரசியலமைப்புச்சட்ட நிறுவனங்கள், இலட்சியம், தேசியக்கொடி மற்றும் தேசியகீதம் ஆகியவற்றையும் மதிக்க வேண்டும்.

2. விடுதலைப் போராட்டத்தின்போது  புத்துணர்வளித்த உன்னதமான இலட்சியங்களை நினைவிற்கொண்டு பின்பற்ற வேண்டும்.

3. இந்தியாவின் இறையாண்மை, ஒன்றுமை  மற்றும் ஒருமைப்பாட்டைப் பேணிப் பாதுகாக்க வேண்டும்.

4. தேவை ஏற்படின், நாட்டின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு, நாட்டுப்பணியாற்ற வேண்டும்.

5. சமய, மொழி, மண்டல அல்லது பிரிவு வேறுபாடுகளைக் கடந்து இந்திய மக்கள் அனைவர் மனதிலும் சகோதரத்துவமும் இணக்கமும் ஏற்பட பாடுபடவேண்டும்.  பெண்களை இழிவு செய்யும் செயல்களை விட்டொழிக்க வேண்டும்.

6. நமது கூட்டுப் பண்பாட்டு மரபினைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.

7. காடுகள், ஏரிகள், ஆறுகள், விலங்கினங்கள் ஆகியவை உள்ளிட்ட  புறச்சூழலைப் பாதுகாத்து மேம்படுத்துவதுடன் உயிரினங்கள் மீதும் கருணை காட்ட வேண்டும

8. அறிவியல் உணர்வு, மனிதநேயம், பகுத்தறிவு  மற்றும் சீர்திருத்த உணர்வை வளர்க்க வேண்டும்.

9. பொதுச் சொத்துக்களைப் பாதுகாக்க வன்முறையை வெறுத்து ஒதுக்க வேண்டும்.

10. தனிப்பட்ட அளவிலும் கூட்டு செயல்பாட்டிலும்  மிகச் சிறந்த நிலையை அடைய முயலுவதன் மூலமாக நாட்டின் மேம்பாட்டிற்கு  முயல வேண்டும்

11.  6 முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகள் அனைவருக்கும் கல்வி பெறும் வாய்ப்பினை வழங்குதல்.  (86வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் 2002இன் படி 51-A (k) கீழ் 11-வது அடிப்படை கடமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  இந்த பிரிவின் கீழ் அனைத்து இந்திய குடிமக்கள் அல்லது பெற்றோர்கள் 6 முதல் 14 வயதுள்ள தங்கள் குழந்தைகள் அனைவருக்கும்  கல்வி பெறும் வாய்ப்பினை ஏற்படுத்தி தர வேண்டும்.)