தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024-2025 (மாநில திட்டக் குழு)
தமிழ்நாடு மாநில திட்டக் குழு 2024-2025 ஆண்டிற்கான தனது முதலாவது பொருளாதார ஆய்வறிக்கையினை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள சில முக்கிய அம்சங்கள் போட்டித் தேர்வு நோக்கில் எடுத்தாளப்பட்டுள்ளது.
முக்கிய அம்சங்கள்
- இந்தியாவின் நிலப்பரப்பில் 4%, நாட்டின் மக்கள் தொகையில் 6% மட்டுமே கொண்டிருக்கின்ற தமிழ்நாடு, 2023-24ஆம் ஆண்டில் தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 9.21% பங்களித்துள்ளது.
- 2023-24-இல் மாநில உள்நாட்டு உற்பத்தியானது (ஜிஎஸ்டிபி) நடப்பு விலையில் ரூ.27.22 லட்சம் கோடியை எட்டியுள்ளது; பெயரளவு வளர்ச்சி விகிதம் 13.71% ஆகவும், உண்மையான வளர்ச்சி விகிதம் 8.33% ஆகவும் உள்ளது.
- மோட்டார் வாகனங்கள், வாகன உதிரிபாகங்கள், ஜவுளி, தோல் பொருள்கள் ஆகியவற்றின் முக்கிய ஏற்றுமதியாளராக விளங்குவதால், மாநிலப் பொருளாதாரமானது உலகளாவிய சந்தை நிலைகளையொட்டியே அமைந்துள்ளது.
- தமிழ்நாட்டின் தனிநபர் வருமான வளர்ச்சியானது தொடர்ந்து பல ஆண்டுகளாகத் தேசிய சராசரியைவிடவும் அதிகமாகவே இருந்து வருகிறது. 2022-23-இல் ரூ.2.78 லட்சமாக இருந்தது; இது தேசிய சராசரியான ரூ.1.69 லட்சத்தைக் காட்டிலும் 1.64 மடங்கு அதிகமானதாகும். இதன் காரணமாக, தனிநபர் வருமானத்தில் தமிழ்நாடு நான்காம் இடம் வகிக்கிறது. மாநிலத்தின் தனி நபர் வருமானம் குறிப்பிடத்தக்க அளவில் தேசிய சராசரியைவிட மேலே உள்ளது.
- பெருநகரமொன்றை மட்டும் மையமாகக் கொண்டு இயங்கும் மகாராஷ்டிரம், கர்நாடகம், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களைப் போலன்றி, தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது மாநிலம் முழுவதுமுள்ள நகர்ப்புற மையங்களில் பரவலாக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர், மதுரை, திருப்பூர், திருச்சிராப்பள்ளி, சேலம் போன்ற நகரங்கள் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்குக் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்குவதோடு, நகர்ப்புற-ஊரக இடைவெளிகளைக் குறைக்கவும் உதவுகின்றன.
- 2023-24-இல், சேவைத் துறை (மூன்றாம் நிலை)-யானது மாநிலத்தின் மொத்த மாநில உற்பத்தி மதிப்புக் கூட்டலில் (ஜிஎஸ்விஏ) 53.63% பங்களித்தது; அதற்கடுத்து இரண்டாம் நிலைத் துறை (33.37%), முதன்மைத் துறை (13%) பங்களித்துள்ளன. வளர்ந்த பொருளாதாரங்களைப் போலவே, மாநிலத்தின் இரண்டாம் நிலைத் துறையின் பங்கு 5% அளவில் அதிகரித்தால், வேலைவாய்ப்புகள் மேலும் அதிகரிக்கும்.
- அதிகம் தொழில்மயமாக்கப்பட்ட, நகரமயமாக்கப்பட்ட பொருளாதாரமான தமிழ்நாடு, 2030-க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டுவதை இலக்காகக் கொண்டுள்ளது.
- தமிழ்நாட்டில் 2019-20-இல் 6% என்றிருந்த நகர்ப்புறப் பணவீக்கம் 2024-25-இல் 4.5% ஆகக் குறைந்துள்ளது (ஜனவரி 2025 வரை); கிராமப்புறப் பணவீக்கம் 5.4% ஆக அப்படியே உள்ளது. இப்படியாக, கிராமப்புறப் பணவீக்கம் மாநிலத்தின் ஒட்டுமொத்தப் பணவீக்கத்தையும் இயக்குகிறது. உணவு மற்றும் பல்வகைப் பொருள்கள் கிராமப்புறப் பணவீக்கத்துக்குக் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்குகின்றன.
- தமிழ்நாட்டின் விவசாயம் பெரும்பாலும் பருவமழையை நம்பித்தான் நடைபெறுகிறது. விவசாயம் ரூ.1.5 லட்சம் கோடி (ஜிஎஸ்விஏ-வில் 6%) பங்களித்து, ஐந்தாவது பெரிய துறையாகத் திகழ்கிறது. மொத்தப் பயிரிடப்பட்ட பரப்பளவில், நெல், மக்காச்சோளம், சோளம், கம்பு, கேழ்வரகு, தினை வகைகள் உள்ளிட்ட உணவு தானியங்கள் 62% ஆகவும், எண்ணெய் வித்துகள், கரும்பு, பருத்தி போன்ற உணவு தானியமல்லாத பயிர்கள் 38% ஆகவும் உள்ளன. பயிர்ப் பரப்பில் நெல் தொடர்ந்து முதன்மை நிலை வகித்துவருகிறது. 2019-20-இல் மொத்தப் பயிர்ப் பரப்பில் 32.1% ஆக இருந்த நெல்லின் பங்கு, 2023-24-இல் 34.4% ஆக அதிகரித்துள்ளது.
- வேளாண் புள்ளிவிவரங்கள்: ஒரு கண்ணோட்டம் (2024) அறிக்கையின்படி, தமிழ்நாடு எண்ணெய் வித்துகள், நிலக்கடலை, கரும்பு உற்பத்தித் திறனில் முதலிடத்திலும், மக்காச்சோள உற்பத்தித் திறனில் இரண்டாம் இடத்திலும், நெல் உற்பத்தித் திறனில் மூன்றாம் இடத்திலும் உள்ளது. வணிக விவசாய விரிவாக்கம், தமிழ்நாட்டின் முதன்மைப் பயிர்களின் உற்பத்தித் திறன் அதிகரிப்பு ஆகியவை இரசாயன உரங்களையும் நிலத்தடிநீரையும் அதிகமாகப் பயன்படுத்துவதன் வாயிலாக எட்டப்படுகின்றன.
- மாநிலத்தின் உர நுகர்வு 2019-20-இல் 9.65 லட்சம் மெட்ரிக் டன்னிலிருந்து 2023-24-இல் 10.68 லட்சம் மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. விவசாய மின் நுகர்வு 13,811 மில்லியன் யூனிட்டிலிருந்து 17,957 மில்லியன் யூனிட்டாக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி
- இந்தியாவின் முட்டை உற்பத்தியில் தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும், இறைச்சி உற்பத்தியில் ஆறாம் இடத்திலும் உள்ளது.
- தமிழ்நாடு மிகச் சிறந்த தொழில் துறை ஆற்றல் மையமாக உள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் உற்பத்தித் துறை 11.90% பங்களிக்கிறது.
- ‘இந்தியாவின் டெட்ராய்ட்’ என்றழைக்கப்படும் இம்மாநிலத்தில், மோட்டார் வாகனங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்களை உற்பத்தி செய்யும் 1,500 தொழிற்சாலைகள் உள்ளன.
- மோட்டார் வாகன உற்பத்தி, ஆடைகள், தோல் பொருள்கள் ஆகியவற்றில் மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
- ஜவுளி, இயந்திரங்கள், மின்னணுத் தயாரிப்புகளில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
- போக்குவரத்து உபகரணங்கள், ரப்பர் பொருள்கள், பிளாஸ்டிக் பொருள்கள், மோட்டார் வாகனங்கள், டிராக்டர்கள், ரசாயனங்கள் உட்படப் பல்வேறு துணைத் துறைகள் இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
சமூக முன்னேற்றத்தில் தமிழ்நாடு
- சமூக முன்னேற்றக் குறியீடு (எஸ்பிஐ) மற்றும் உயர்கல்வியில் மொத்தச் சேர்க்கை விகிதம் (ஜிஇஆர்) ஆகியவற்றில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
- குறைவான குழந்தை இறப்பு விகிதம், குறைவான பிறப்பு விகிதம், குறைந்த வறுமை நிலைகள் ஆகியவற்றில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
- நீடித்த வளர்ச்சி இலக்குகள் (எஸ்டிஜி) குறியீட்டிலும், சுகாதாரக் குறியீட்டிலும் மூன்றாமிடத்தில் உள்ளது.
- முக்கியமான முன்னெடுப்பாக, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், மாணவர்களின் வருகை அதிகரிப்பு மற்றும் ஊட்டச்சத்தை உறுதி செய்துள்ளது. அதைப்போலவே, மகளிர் மேம்பாட்டிற்கெனக் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், மகளிர் விடியல் பயணத் திட்டம் உள்ளிட்ட முன்னெடுப்புகளையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தியுள்ளது.
- 2005-06 முதல் 2022-23 வரையிலான காலத்தில், தமிழ்நாட்டின் வறுமை நிலை (ஹெச்சிஆர்) 36.54%-இலிருந்து வெறும் 1.43% என வெகுவாகக் குறைந்துள்ளது. அதே வேளையில், அகில இந்திய அளவில் வறுமை நிலை 55.34%-இலிருந்து 11.28% ஆகக் குறைந்துள்ளது.
- 2023-24-இல், முக்கியமான மாநிலங்களில் ஊரகப் பகுதிகள் மற்றும் நகர்ப்புறங்களில் சராசரி தனிநபர் நுகர்வுச் செலவில் தமிழ்நாடு நான்காவது இடத்தைப் பிடித்தது. தனிநபர் ஆண்டு வருமானத்தில் நான்காவது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டது.
கல்வியில் தமிழ்நாடு
- நிதி ஆயோக் வெளியிட்ட அறிக்கையின்படி, பள்ளிக் கல்வித் தரநிலைக் குறியீட்டில் கேரளாவுக்கு (82.2%) அடுத்த நிலையில் தமிழ்நாடு (73.4%) உள்ளது.
- மேல்நிலைக் கல்வியைத் தொடர முடியாமல் இடைநிற்றல் வீதம் தமிழ்நாட்டில் 4.5% ஆக உள்ள நிலையில், தேசிய சராசரி 12.6% ஆக உள்ளது.
- நாட்டிலுள்ள சிறந்த 50 ஆராய்ச்சி நிறுவனங்களில் மூன்று நிறுவனங்களைக் கொண்டு உயர் கல்வியிலும் தமிழ்நாடு சிறப்பாகச் செயல்படுகிறது. மேலும், தேசிய அளவில் சிறந்த 100 பல்கலைக்கழகங்களில் 8 மாநிலப் பல்கலைக்கழகங்களும், சிறந்த 100 கல்லூரிகளில் நான்கு அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் இடம் பெற்றுள்ளன.
காலநிலை மாற்றம் மற்றும் நடவடிக்கைகள்
- தமிழ்நாடு கவனம் கொள்ள வேண்டிய ஒன்றாகக் காலநிலை மாற்றம் உருவெடுத்துள்ளது. அண்மை ஆண்டுகளில் பெரும் புயல்கள் (2016-இல் வர்தா, 2017-இல் ஒக்கி, 2018-இல் கஜா, 2023-இல் மிக்ஜாம் மற்றும் 2024-இல் ஃபெங்கல்) மற்றும் வெள்ளம் (குறிப்பாக 2015 மற்றும் 2017) உள்ளிட்ட தீவிர வானிலை நிகழ்வுகளை மாநிலம் அதிகம் அனுபவித்துள்ளது.
- ஒரு நூற்றாண்டுக்கு +0.68 டிகிரி செல்சியஸ் அதிகரிப்புடன், சராசரி வெப்பநிலை மாற்றத்தில் மேல் நோக்கிய நிலை காணப்படுவதோடு, மாநிலத்தில் மழைப்பொழிவு குறைந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
- 2023-30-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு காலநிலை மாற்றச் செயல் திட்டத்தை உருவாக்கியுள்ளதோடு, காலநிலை மாறுபாடுகளை எதிர்கொள்ள ரூ.1,000 கோடி பசுமை நிதியமும் உருவாக்கப்பட்டுள்ளது.
- நிதி ஆயோக்கின் எஸ்டிஜி 13 (காலநிலைச் செயல்பாடு) குறியீடு 2023-24 அறிக்கையில், தமிழ்நாடு 81 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளதாகத் தெரிவித்துள்ளது. தேசிய சராசரியான 67-ஐ விட இது அதிகமான அளவில் உள்ளது.