முக்கிய திட்டங்கள் - தமிழ்நாடு

தமிழ்நாடு மாநில திட்டக் குழு 2024-2025 ஆண்டிற்கான தனது முதலாவது பொருளாதார ஆய்வறிக்கையினை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தின் சில முக்கிய திட்டங்கள் குறித்த குறிப்புகள் இடம்பெற்றுள்ளது. அவற்றில் சில திட்டங்கள் போட்டித் தேர்வு நோக்கில் கீழே வழங்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம்

நோக்கம்
  • தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம் (TNUES), தேர்ந்தெடுக்கப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சிகளில் (ULBs), திறன் குறைந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி, நகர்ப்புறங்களில் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. 
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு, இத்திட்டம் நகர்ப்புற உள்ளாட்சிகளில் தேவையின் அடிப்படையில், நூறு நாட்கள் வேலைவாய்ப்பை வழங்குகிறது. இத்திட்டம் வேலைவாய்ப்பு வழங்குவதில் ஏற்படுத்திய தாக்கத்தை மதிப்பிட, ஒரு மதிப்பீட்டு ஆய்வு நடத்தப்பட்டது.
ஆய்வு முடிவுகள்:
  • தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலை பெறுபவர்களில் 83% பேர் பெண்கள். இவர்கள் இதற்கு முன்னர் வேலையில்லாதவர்கள் அல்லது குறைந்த வருமானம் தந்த வேலையில் இருந்தவர்கள்.
  • 22% பேர் வேளாண்மைப் பணிகளில் இருந்தவர்கள், 25% பேர் குடும்பத்தின் முதன்மை வருமானம் ஈட்டும் தொழிலாளிகள், 18% பேர் மகளிரைத் தலைவராகக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.
  • இத்திட்டத்தின் பங்கேற்பாளர்களில் ஏறத்தாழ 99% பேர் இத்திட்டத்தின் விரிவாக்கத்தை ஆதரிக்கிறார்கள் என்பது, பெண்கள் மேம்பாட்டிலும் அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்தியதிலும் இத்திட்டம் நேர்முறையாகச் செயல்பட்டதைச் சுட்டிக் காட்டுகிறது.
பரிந்துரைகள்:
  • உரிய பணிகளை அடையாளம் கண்டு, சிறப்பாகச் செயல்படுவதன் மூலம் இத்திட்டமானது தமிழ்நாட்டின் நகர்ப்புறங்களில் குறிப்பாக, பேரூராட்சிகளில் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பை அளிப்பதுடன், சமூகப் பாதுகாப்பையும் வழங்க முடியும்.


தமிழ்நாடு அரசின் இல்லம் தேடிக் கல்வித் திட்டம்:
பொதுக் கல்வியில் புத்தாக்கம்

நோக்கம்
  • தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட இல்லம் தேடிக் கல்வித் திட்டம், கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் இரண்டு ஆண்டுகள் பள்ளிகள் மூடப்பட்டதால் ஏற்பட்ட கற்றல் இழப்பை ஈடுசெய்யும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான முன்னெடுப்பாகும்.
  • இத்திட்டம், மாநிலம் முழுவதும் உள்ள ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குத் தன்னார்வ ஆசிரியர்களால் பாடம் நடத்தி, அவர்களது கற்றல் இழப்பை ஈடுசெய்ய உறுதுணைபுரிந்தது. இத்திட்டத்தின் தாக்கத்தை மதிப்பீடு செய்வதற்காக ஒரு விரைவான மதிப்பீட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வு முடிவுகள்:
  • தன்னார்வல ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சி மிகப் பெருமளவில் பலனளிப்பதாக இருந்தது. மாற்றுச் சிந்தனை, படைப்பாக்கத் திறனை வளர்த்தெடுத்துக் கற்றலை உற்சாகமான அனுபவமாக்கியதுடன், மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை அளித்து இத்திட்டம் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • ஆடல் பாடல், கதைசொல்லல், செயல்பாடுகளுடன் கற்பித்தல் ஆகிய முறைகளில் பாடங்கள் கற்றுத் தரப்பட்டதே இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் வெற்றிக்குக் காரணம் என்கிறார்கள் ஆசிரியர்கள்.

  • பள்ளிக்கூடம் விட்ட பிறகு குழந்தைகளைப் பாதுகாக்கும் மையங்களாக இல்லம் தேடிக் கல்வித் திட்ட மையங்கள் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கை பெற்றோர்களிடமிருந்து, குறிப்பாக வேலைக்குச் செல்பவர்களிடமிருந்து எழுந்துள்ளது.


புதுமைப் பெண் திட்டம்


  • புதுமைப் பெண் திட்டத்தில் பெண்களின் உயர்கல்விக்காக மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. அரசுப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்ற பெண்கள் (அண்மையில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது) பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு, தொழில் படிப்பு போன்ற படிப்புகளைப் படித்து முடிக்கும் வரை இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது.
  • இளம் வயதுத் திருமணங்களைத் தவிர்த்து, பெண்கள் உயர்கல்வியில் சேருவதை ஊக்குவிப்பதில் இத்திட்டம் கவனம் செலுத்துகிறது.

ஆய்வு முடிவுகள்:

  • புதுமைப் பெண் திட்டத்தில் மாநிலத்தின் 38 மாவட்டங்களிலுள்ள 2,30,820 மாணவிகள் பயனடைந்துள்ளனர்.

  • மாணவிகள் 7,110 (3.08%) பேர் தேசிய நிறுவனத் தரவரிசைக் கட்டமைப்புப் பட்டியலில் இடம் பெற்ற (NIRF-ranked) கல்வி நிறுவனங்களில் பயின்று வருகின்றனர். நகர்ப்புறப் பகுதியைவிட அதிகமாக ஊரகப் பகுதியைச் சேர்ந்த பெண்கள் இத்திட்டத்தில் பயனடைந்துள்ளனர்.

  • இத்திட்டத்தின் பயனாளிகளில் 3 சதவீதத்தினர் பெற்றோரை இழந்த அல்லது ஒற்றைப் பெற்றோரைக்கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

  • இத்திட்டத்தின் பயனாளிகளில் 82 சதவீதத்தினர் முறைசாராத் துறையில் ஈடுபடும் பெற்றோரைக்கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

  • 2022-23 கல்வியாண்டில் பெண்களின் கல்லூரிச் சேர்க்கை 6.9% அதிகரித்துள்ளது.


மக்களைத் தேடி மருத்துவம்

  • மருத்துவ வசதியைத் தேடிப் பெற இயலாதாரின் இல்லத்துக்கே சென்று மருத்துவப் பரிசோதனைகளையும் சிகிச்சைகளையும் மேற்கொள்வதற்காக 2021இல் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்பட்டது.
  • புற்றுநோய் உள்ளிட்ட தொற்றா நோய்களைத் தொடக்க நிலையிலேயே கண்டறிவதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கம். மேலும், கண்ணொளி காப்போம் திட்டம் மூலம் சிறார்களின் கண் பார்வையைப் பாதுகாப்பதற்கும் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.

திட்டத்தின் சாதனைகள்:

  • மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் 2.23 கோடிப் பேருக்கு மருத்துவ சேவைகளும் வருமுன் காக்கும் சிகிச்சைகளும் வழங்கி சுகாதார நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.


முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் வெற்றி:
குழந்தைகளைப் பேணிக் காத்தல்


  • அரசுத் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டையும் பசியையும் களையும் நோக்கத்தில் முன்னெடுக்கப்பட்ட புரட்சிகரமான திட்டம் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்.
  • ஊட்டச்சத்தான காலை உணவை வழங்குவதன் மூலம், குழந்தைகளின் உடல் நலத்தை மட்டுமன்றி, அவர்களின் அறிவாற்றலையும் நினைவாற்றலையும் ஒட்டுமொத்தப் பயில் திறனையும் இத்திட்டம் மேம்படுத்துகிறது.

திட்டத்தின் சாதனைகள்:

  • மாணவர்களின் வருகைப் பதிவு 93% ஆக அதிகரித்திருந்தது, கல்வியில் குழந்தைகள் ஆர்வத்துடன் ஈடுபடுவதைப் பிரதிபலிக்கிறது.

  • இத்திட்டத்தின் பயனாளிகளில் 85% குழந்தைகளின் கல்வி மேம்பட்டுள்ளதைத் தெளிவாகக் காணமுடிகிறது. குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்கு இத்திட்டம் பேரளவில் பங்களிக்கிறது.

  • குடும்பங்களின் பொருளாதாரச் சுமை குறைகிறது, பொருளாதார நிலைத்தன்மை வலுப்படுத்தப்படுகிறது, சமூக நலம் பேணப்படுகிறது. பணிக்குச் செல்லும் தாய்மார்களுக்கும் பேராதரவாகவும் திகழ்கிறது.

  • தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் இந்த முன்னோடித் திட்டத்தைப் போன்றதொரு திட்டம் இங்கிலாந்து, கனடாவிலும் முன்னெடுக்கப்படுகிறது.
  • குழந்தைகளிடமும் குடும்பங்களிடமும் நேர்முறைத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இத்திட்டம், ஒவ்வொரு குழந்தையும் தங்களின் நாளை ஊட்டச்சத்துடன் தொடங்குவதை உறுதிசெய்து முழுமையான கல்வி வளர்ச்சிக்கான முன்மாதிரியாக விளங்குகிறது.